ஐக்கியம்

 

குருமகான் அவர்களின் ஐக்கியத்திற்கு இரண்டுஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள்தாம் தீர்மானித்த எண்ணப்படி மலேசியா, சிங்கப்பூர்,இந்தியாவின் பல ஊர்களுக்குச்சென்று தன் மீது மிகுந்த ஆத்மார்த்தமான அன்பு கொண்ட குடும்பங்கள்,சிஷ்யர்களை நேரில் சந்தித்து காட்சி கொடுத்து வாழ்வின் முன்னெச்சரிக்கையான அறிவிப்புகளைக்கூறி ஆசி வழங்கியுள்ளார்கள்.

16.11.1980 ஞாயிறு அன்று திருவலஞ்சுழி சபையில் தமது ஞான உதய தின விழா ஏற்பாடு செய்து ஏராளமான தமது சிஷ்யர்களாகிய மெய்யுணர்வு ஞானச்செல்வர்களை வரச்செய்து விழாவை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.

அது சமயம் தமது பிரசங்கத்தில் தாம் திட்டமிட்டிருந்த தன் உடல் ஐக்கியம் பற்றிய விவரங்களை முன் அறிவிப்பாக காலம் இடம் இவைகளை சூசகமாக இரட்டைச் சொல்லாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.உலக முக்கிய தலைவர்களை எல்லாம் ஞாபகப்படுத்தி அரசியல்,மக்கள்,தமது சிஷ்யர்களாகிய மெய்யுணர்வாளர்கள் சுகமாய்,சந்தோஷமாய் வாழ்வார்கள் என்று ஆசி வழங்கினார்கள்.இதுவே மகான் அவர்களின் இறுதி பிரசங்கமாக அமைந்தது.28,29,30.12.1980 தேதிகளில் கும்பகோணம் S.T.மருத்துவமனையில் மகான் அவர்கள் தமது உடல் முழுமையாக பரிசோதித்துக் கொண்டு எக்ஸ்ரே முதலானவைகள் எடுக்கப்பட்டு உடலில் எவ்வித நோயுமில்லை வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று டாக்டர்,தியாகராஜன் அறிவித்தார். அதன் பிறகு 01.01.1981 பிரயாணக் குறிப்பு நோட்டீஸ் படி பாண்டிச்சேரிக்கு பயணமாகும் போது என்னையும் உடன் வரும்படி பணித்து கடிதமும்-தந்தியும் அனுப்பியவாறு நானும் உடன் சென்றேன். 01.01.1981 முதல் 06.01.1981 வரை பாண்டிச்சேரி நிகழ்ச்சிகள் யாவும் மிக உற்சாகமாகவே நடைபெற்றன. மகான் அவர்களின் உடல் நலமும் சீராகவே இருந்தது.

06.01.1981 அன்று நான் மகான் அவர்களோடு உறையாடிக் கொண்டிருந்த போது - "நாளையுடன் யாவும் முடிந்துவிடும்.நான் முடித்துக் கொள்ளப்போகிறேன் காலம் ஓடிவிடும் என்றார்கள் ".

07.01.1981 காலை 7 மணியளவில் தினமணி நாளிதழை மகான் தமது கையில் மடித்தபடியே வைத்துக்கொண்டு '' இதில் நாளை மரணச்செய்தி வந்துவிடும்'' என்றார்கள் அதன்படி 08.01.1981 மரணச்செய்தி போடப்பட்டது.

10.45க்கு ஈரோடு சபையிலிருந்து ஓரு கடிதம் வந்தது அதை தாமே பிரித்துப்படித்து என்னையும் படிக்கக்கேட்டு அதிலுள்ள திருத்தங்களை அவர்களுக்கு அறிவித்துவிடுமாறு என்னை பணித்தார்கள். மகான் அவர்கள் எழுதிய இலட்சக்கணக்கான கடிதங்களில் இந்த கடிதமே மகான் அவர்கள் பதில் எழுதாத கடைசி கடிதமாகும். 7ம் தேதி முற்பகல் 11 மணிக்கு என்னிடம் மிக நெருக்கமாக வந்து என் முகத்தைப்பார் ''நன்றாக இருக்கிறேனா'' என்று கேட்டார்கள் அதற்கு நன்றாகவே இருக்கிறீர்கள் ஏன் என்று கேட்டேன். ''ஓன்றுமில்லை நான் என்விருப்பப்படி எதுவும் செய்வேன் நீ பயந்து அழுது சத்தம் போட்டுவிடாதே உன் கடமையைச் செய் என்று கூறியபடி தமது படுக்கையில் போய் உட்கார்ந்தார்கள்'' அப்போது அவர்களுக்கு நெஞ்சில் கபம் சளி அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்.படுத்தால் சளி தொண்டையை அடைத்துவிடும் என்று கருதி அவர்கள் படுக்கையில் அவருக்கு பின்புறமாக மண்டிக்கால் இட்டுக்கொண்டு அவர் உடலை என் மார்பில் சாய்த்தபடி இருந்தேன்.16.11.1980 அன்று திருவலஞ்சுழி விழாவில் அறிவித்தபடியும் என்னிடம் உரையாடியபடி 07.01.1981 முற்பகல் நேரம் 11.11 மணிக்கு புதன்கிழமையன்று மகான் அவர்கள் உடல் என் மார்பில் சாய்ந்தபடியே தன் ஐக்கியத்தை முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு குரு மகான் அவர்களின் புனித உடலை அன்று மாலை சென்னை சபையில் சேர்ப்பித்தேன்.

08.01.1981 வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சென்னை 81, T.H.ரோடு எண்.4 புதுவண்ணை சுங்கச்சாவடி சமீபமாக உள்ள உலக சமாதான ஆலய சபையாகிய சொந்த இடத்தில் அரசு அனுமதி பெற்று அவர் தம் ஒளிமிக்க உடலை குருமகான் விரும்பியஇடத்தில் நல்லடக்கம் செய்விக்கப்பட்டது.

குருமகான் அவர்கள் தன் சரீரத்தை ஜோதியோடு ஜோதியாய் மறைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவராக இருந்தும் தன் ஐக்கியத்தை மிக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்தது தியாகத்திலும் சிறந்த தியாகச் செயலாய் அமைந்துள்ளது.மக்கள்,சூழ்நிலை,காலம்,இனி வருங்கால மக்களின் ஞானநல்வாழ்வு,இவைகளைக் கருதி தன் உடலை விட்டு விட்டு உணர்வு பெற்ற பெறவிருக்கிற அனைத்து சிஷ்யர்களிடத்திலும் உணர்வோடு உணர்வாய்க் கலந்து தன் உடல் மறைவிற்குப்பின்னும் தன்னாற்றல் மறையாமல் என்றென்றும் நிலைத்து வாழ்வேன் வாழ்விப்பேன் என்று அறிவித்தவாறு வாழ்கிறார்கள். மெய்யுணர் உடையோர் யாவரும் இதனை அறிவர்.