பரஞ்ஜோதி மகான் அவதாரமும் வாழ்க்கைக்குறிப்பும்

 

imageஉலக சமாதான ஆலயஸ்தாபகர் ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் அவர்கள் மதச்சார்பு மொழி இவைகளைக்கடந்து உலக எல்லா நாடுகளிலும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஞானம் வழங்கிய ஞான வள்ளலாவார்கள்

 

இந்திய தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சார்ந்த கான்சாபுரம் என்னும் சிற்றூரில் புகழ்மிக்க குடும்பத்தில் சையத் இபுராஹீம், மும்சாபீவி தம்பதியருக்கு மகனாக 02.05.1900 மாவது ஆண்டு அவதரித்தார்கள்

 

மகான் அவர்கள் உலகனைத்து நாடுகளுக்கும் பலமுறை சென்று உலக சமாதான ஆலயம் என்னும் தாம் கண்ட அமைப்பின் மூலம் அனைவருக்கும் பேறின்பம் தத்துவ தவஞான விளக்கமும் தன்னிலையையும் அனுபவபூர்வமாக வழங்கியதால் ஞானவள்ளல் என்று மக்களால் போற்றி அழைக்கப்பட்டார்கள்.

 

மகான் அவர்கள் இளமையில் தந்தையை இழந்ததால் கல்வி கற்கும் வாய்ப்பு அமையவில்லை.தீவிரபக்தி வணக்கங்களில் நாட்டமுடையவராய் மிக துணிச்சல் உடையவராயும் எந்தமறை பொருளையும் கண்டுபிடித்தே தீருவேன் என்று உறுதிகொண்டவராய் விளங்கி வந்துள்ளார்கள்.

 

11.11.1911ம் ஆண்டு மேலைநாட்டு மன்னர் ஒருவரின் முடிச்சூட்டுவிழா விமரிசையாக கொண்டாடியபோது மகான் ஒரு பெரியவரை அணுகி இந்த விழா கொண்டாட காரணம் என்ன என்று கேட்டார்கள் நமது அரசருக்கு முடிசூட்டு விழாவானதால் கொண்டாடவேண்டியது அவசியம் என்றார்.உடனே அரசருக்குப் பெரியவர் யார் என்று கேட்டார்.கடவுள் என்று சொன்னார்.கடவுளை நான் பார்க்க முடியுமா என்று கேட்ட போது சின்னஞ்சிறு குட்டி இவ்வளவு பெரிய கேள்வி கேட்கிறாயே என்று செல்லமாக தட்டி பார்க்கலாம் முயற்சி எடு என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.அன்றுமுதல் கடவுளை கண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் உதித்த நாளை தமது ஞான உதயதினமாகக் கொண்டு அன்றிலிருந்து பலவகை யோகங்கள் தொழுகைகளில் பாடுபட்டும் கடவுளைக் காண முடியவில்லை.

 

இறுதியாக பர்மா ரங்கூனில் வசித்துவந்த இந்தியாவிலுள்ள ஹைதராபாத் டெக்கான்,பிஜப்பூர் வாசியான ரெத்தின வியாபாரி சையத் இப்ராஹீம் ஃகாரிபுல்லாகாமில் என்ற வேத அறிஞர் வயது முதிர்ந்தவர் அவரின் நட்பு ஏற்பட்டு தர்க்க ரீதியாக உரையாடியதில் நெற்றிப்பொட்டை தொட்டு உணர்த்தும் தாந்திரீக யோகமுறை உபதேசத்தை அவரிடம் 07.01.1938 இரவு 11.11 மணிக்கு பெற்றுக்கொண்டார்கள்.

 

அன்றிலிருந்து மகான் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.பேருண்மையைக் கண்டுகொண்டேன் என்ற நிலையில் பேறின்பம் ததும்பி,அறிவு தன்னிலை விளக்கமும்,பிரபஞ்ச தத்துவ ஞானமும், நான்கடவுள் விளக்கமும்,தமது பெரும் முயற்சியாலும், ஆராய்ச்சி விவேகத்தாலும் பெறப்பட்டார்கள் அன்றிலிருந்து ஒரு பெரும் குருவாக மக்களால் மதிக்கப்பட்டார்கள்.

 

1939ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து தாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்று விரும்பி மதுரைக்கு வந்து தங்கி பல இன்னல்களுக்கு இடையே சிறு துண்டு நோட்டீஸ்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்ததில் மக்கள் தங்கள் கேள்விகளுக்கு விளக்கமறிந்து ராஜமரியாதை தந்து ஆதரித்தார்கள்.

 

1941ல் பரிபூரண பரஞ்ஜோதியின் உயர்ஞான சபை துவங்கினார்கள்.மக்கள் ஆதரவு கூடியபின் சொந்த நிலம் வாங்கி 20.06.1947 மதுரையில் உலக சமாதான ஆலயம் நிறுவினார்கள்.அதன் பிறகு சென்னை சென்று 31.10.1943ல் சபை துவங்கி 20.07.1946ல் சொந்த நிலம் வாங்கி உலக சமாதான ஆலயம் என்னும் சபையை தோற்றுவித்தார்கள். காலத்தால் மக்கள் அறியலானர்கள் தற்போது உலகமெல்லாம் சபைகள் ஏற்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

 

இது ஊழி ஊழி காலம் நிலைத்து நின்று இனிவரும் மக்களும் ஞான நல்லாழ்வு வாழ்வார்கள் உலக சமாதானம் நிலவும் என்பதில் ஐயமில்லை